எந்த பதவி மீதும் ஆசைப்படாத கிங் மேக்கர் நடராஜன் - திவாகரன் புகழாரம்

எந்த பதவி மீதும் ஆசைப்படாதவராக கிங் மேக்கராகவே இருந்துவிட்டார் என்று சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியருமான ம.நடராஜன், கடந்த பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் நடராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

ம.நடராஜனின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் சசிகலா சகோதரர் திவாகரன் பதினைந்து நாள் பரோலில் வந்த சசிகலாவை பார்த்து கண்கலங்கினார். பிறகு நடராஜனின் உடலுக்கு மலர் வளையம் வைத்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய திவாகரன், “நடராஜனின் உடல் அவர் விருப்பபடியே திராவிட சுயமரியாதைபடி அவரது உடல் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதிரே அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படும். முள்ளிவாய்க்கால் முற்றம் உருவாக உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்பணித்தவர். அரசியல் துரோகிகள் எங்களுக்கு எவ்வளவு துரோகம் செய்து வந்தாலும் அதை உறவினர்கள், நன்பர்களின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறோம்.

அதிமுகவில் பிரச்சினை உறுவானபோதில் இருந்தே நடராஜன் மனதளவில் பாதிக்கப்பட்டு, உடல் நலம் குன்றிப்போனார். எம்ஜிஆர் இறப்பிற்கு பிறகு அதிமுகவை மீட்க நடராஜன் செய்த தியாகம் அரசியல் தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

இந்தி எதிர்ப்புக்காக தனது உயிரையே தியாகம் செய்ய துணிந்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ராஜேந்திரன் என்பவர் மீது குண்டுபட்டு இறந்தார், அடுத்த குண்டு நடராஜன் மீது படவேண்டியது மயிரிழையில் தப்பித்தார்.

அண்ணாவால் அடையாளம் காணப்பட்டு கலைஞரால் வளர்க்கப்பட்டவர் நடராஜன், இவருக்காகவே மக்கள் தொடர்புத்துறையை உருவாக்கிக்கொடுத்தனர். எந்த பதவி மீதும் ஆசைப்படாதவராக கிங் மேக்கராகவே இருந்துவிட்டார்.

நடராஜனால் 75 பேர் அமைச்சராகியுள்ளனர், அவர்களுக்கு நன்றியோ அரசியல் நாகரீகமோ கிடையாது. அரசியல் வேறு துக்கம் வேறு என்பது கூட தெரியாதவர்களாக இறுந்துகொண்டு பல இன்னல்களை எங்களுக்கு கொடுக்கின்றனர். என்ன துரோகம் செய்தாலும் நாங்கள் நெருப்பாற்றில் நீந்தியவர்கள் மீண்டும், மீண்டும் நீந்தி மீண்டு வருவோம்" என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>