கைதானார் கைராசி டாக்டர் படிக்கவும் இல்லை.. பயிற்சியும் இல்லை.. 20 ஆண்டுகள் வைத்தியம் பார்த்த விபரீதம்..!
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீனிவாசன் என்பவர் எந்தவித மருத்துவ படிப்போ, பயிற்சியோ இல்லாமல் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.ஸ்ரீநிவாசன் வேதியியல் மற்றும் மருத்தங்கம் (Pharmacy) படித்த பட்டதாரி. திருவள்ளூரில் மருந்து கடை வைத்து நடத்தி வந்தார். பின்னர் அவர் பூண்டி கிராமத்திற்குச் சென்று தன் மருந்தகத்தை ஒட்டி சிறிய அளவிலான ஆஸ்பத்திரியைத் துவங்கி கிராம மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கியுள்ளார்.
அவர் சுமார் 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருவதாகவும் மிகவும் கைராசியான டாக்டர் என்றும் அப்பகுதி மக்கள் சிலர் தெரிவித்தனர். சிறு சிறு நோய்களுக்கு அவரே ஊசி போட்டு மருந்து கொடுப்பார். குணமாகிவிடும். அவரால் இது வரை எங்களில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்று பெருமை பொங்கச் சொல்கிறார்கள் அப்பகுதி வாசிகள் சிலர். கொரோனா வைரஸ் பரவ துவங்கிய போது தன் கிளீனிக்கை மூடிய ஸ்ரீநிவாசன் ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் தன் டிரீட்மெண்ட்டை துவங்கியுள்ளார்.சீனிவாசன் எந்தவித மருத்துவ படிப்போ, பயிற்சியோ இல்லாமல் சிகிச்சை அளித்து வருகிறார் என்ற தகவல் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.தீபாவிற்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தார்.அதைத் தொடர்ந்து ஸ்ரீநிவாசனைக் கைது செய்த போலீசார் அவர் மீது இந்தியா தண்டனை சட்டம் பிரிவு 419 (ஆளுமை மூலம் மோசடி) மற்றும் 420 (மோசடி) மற்றும் இந்திய மருத்துவச் சட்டத்தின் 15 (3) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது ஸ்ரீநிவாசன் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.