புதிய வேளாண் சட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள காங்கிரஸ் எம். பி. வழக்கு..!
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம். பி. பிரதாபன் மனுத் தாக்கல் செய்தார்.2020ஆம் ஆண்டு விலை உறுதி மற்றும் விவசாய சேவைகளுக்கான விவசாயிகள் ஒப்பந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரதாபன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கினார்.
அவரது ஒப்புதல் கிடைத்ததும் அந்த சட்டம் அரசாணையில் வெளியிடப்பட்டது. விவசாயிகளின் நலன் தனிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், வட்டிக் கடைக்காரர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.தொழிற்சாலைகளிலும் வயல்களிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனைகளை எழுப்பத் தனி நீதி மன்றங்கள் இயங்குகின்றன. ஆனால் விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்குத் தனி நீதிமன்றங்கள் இந்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்படவில்லை.
விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஏற்கனவே கடும் வேலைப்பளுவைச் சுமந்துகொண்டு உள்ள அரசு ஊழியர் அதிகாரிகளை அணுகுவதற்கு இந்தச் சட்டம் வகை செய்கிறது. அதனால் இந்தச் சட்டத்திற்குத் தடை விதிக்க பிரதாபன் தனது மனுவில் கோரியுள்ளார்.இந்த மனு எப்போதாவது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.