கொரோனா தொற்று இல்லை விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்.. பிரேமலதா அட்மிட்..
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 22-ந் தேதி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி அறையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சில உடல் நல பிரச்சனைக்காக விஜயகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கட்சித் தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில் விஜயகாந்த்தின் மனைவியும்,தே.மு.தி.கழகத்தின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த இரு தினங்களாகக் காய்ச்சல், சளி தொல்லை ஏற்பட்டது. அவரும் கணவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: தே .மு. தி. க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 28ம் தேதி கோவிட் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு நோய்த் தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். பிரேமலதா, விஜயகாந்த்தின் முதல்நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவ சேவைகளினால் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.
இவ்வாறு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.