பத்து லட்சம் ரூபாய் கேட்டு விஞ்ஞானி கடத்தல்.. உ.பி.யில் மூவர் கைது,,
நொய்டாவில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் தொடர்புடைய விஞ்ஞானி ஒருவர், மர்ம கும்பலால் கடத்தப்பட்டுப் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். கடத்தப்பட்ட விஞ்ஞானியை மீட்ட போலீசார் இதில் தொடர்புடைய 5 பேரில் 3 பேரைக் கைது செய்தனர்.
உ.பி. மாநிலம் நொய்டாவில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் தொடர்புடைய 35 வயது விஞ்ஞானி ஒரு செய்தித்தாளில் இருந்த ஒரு மசாஜ் பார்லர் விளம்பரத்தைப் பார்த்து அதிலிருந்த மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மறுபுறம் பேசிய நபர் அவரை ஒரு இடத்திற்கு வரும்படி கூறியுள்ளார். அங்குச் சென்ற விஞ்ஞானியை அங்கிருந்து ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சென்றதும் அவரை மடக்கி கை கால்களை கட்டிப் போட்டு அவர் மனைவிக்கு போன் செய்து 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். பயந்து போன விஞ்ஞானியின் மனைவி பணத்தைக் கொடுக்க முயற்சித்துள்ளார். அவரால் பணத்தைத் திரட்ட முடியாமல் போகவே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீசார் செல்போன் சிக்னல் மூலம் விஞ்ஞானியைக் கடத்தி வைத்திருந்த ஹோட்டலை கண்டுபிடித்தனர். விஞ்ஞானியின் மனைவியிடம் ஒரு பையைக் கொடுத்து உள்ளே அனுப்பினர். அங்கு வந்த 3 பேரைப் பிடிக்க முயன்ற போது இருவர் தப்பித்துச் சென்றனர். பிடிபட்டவர் மூலம் விஞ்ஞானியை மீட்டனர். மேலும் அதே ஹோட்டலில் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய இருவரை போலீசார் தீவிரமாகத் தேதி வருகிறார்கள்.இத்தகைய கடத்தல் குற்றங்கள் நொய்டாவில் வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இந்த கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்ளூர் பாஜக அமைப்பின் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் சுனிதா குர்ஜார் ஆவார்.. இவர் பிக் பாஸ் சீசன் 10 ல் வெற்றியாளரான மன்வீர் குர்ஜரின் உறவினர் எனக் கூறி நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார். மேலும் நடிகர் சல்மான்கானுடன் அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் நொய்டா பாஜக பிரிவு அவர் முன்னாள் கட்சி தொண்டர் என தெரிவித்துள்ளது. பிக்பாஸ் வெற்றியாளரான மன்வீரின் குடும்பத்தினரும் அவர் தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆனால் உறவினர் அல்ல என்று தெரிவித்துள்ளனர். இந்த கும்பல் இதேபோல் மேலும் மூன்று பேரை ஏமாற்றியதாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய ஓயோ நிறுவன செய்தித் தொடர்பாளர் “இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. எங்களது ஹோட்டல் மற்றும் வீடுகளில், எங்கள் விருந்தினர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. நாங்கள் இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகிறோம். சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் ஒத்துழைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் ஹோட்டல்களில் எந்தவொரு தவறான நடத்தைக்கும் இடமில்லை. இந்த ஹோட்டலுடனான எங்கள் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.