ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை.. மறு சீராய்வுக் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு...!
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறு சீராய்வுக் கூட்டம், இன்று அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறவிருந்தது. இந்நிலையில் இக்கூட்டம் திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறுசீராய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த மாதம் 29ம் தேதி துவங்குவதாக இருந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம், ஒத்தி வைக்கப்படுகிறது. மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 6 உறுப்பினர்களின் பெரும்பான்மை கருத்துக்கு ஏற்ப வட்டி விகிதங்கள், கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி சாரா உறுப்பினர்கள் ரவிந்திர தோலாகியா, சேத்தன் காடே மற்றும் பாமி துயா ஆகிய 3 பேரின் 4 ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 6ம் தேதியுடன் முடிந்து விட்டது. அதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு இதுவரை முடிவு எடுக்கவில்லை.எனவே மத்திய அரசு கமிட்டிக்கான 3 புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்த பின் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.