கோவில்பட்டியில் அனுமதி பெறாத கொரோனா பரிசோதனை மையம்.. இழுத்து மூடிய கலெக்டர்..

கோவில்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு பயிற்சி பெறாத நபர்கள் மூலம் கொரோனா சளி மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் தலைமையிலான டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கோவில்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கோவில்பட்டி கதிரேசன் கோயில் ரோடு பகுதியில் தனியார் சளி மாதிரி சேகரிக்கும் மையம் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும் பயிற்சி பெறாத நபர்கள் மூலம் நோயாளிகளிடமிருந்து சளி மாதிரிகள் சேகரித்து வருவது கண்டறியப்பட்டதால் அந்த சளி சேகரிப்பு மையம் உடனடியாக மூடப்பட்டது.

இதுபோன்ற கொரோனா நோய்த் தொற்றினை கண்டறியும் சளி மாதிரி சேகரிப்பு மையம் செயல்படுவதற்கு அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வரும் சளி மாதிரி சேகரிப்பு மையங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் மாவட்ட சுகாதாரத் துறையினர் மூலம் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. மேலும் ஆய்வின்போது அரசு அனுமதி பெறாத சளி மாதிரி சேகரிப்பு மையங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் செயல்படுவது கண்டறியப்படின் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நோயாளிகள் எவருக்கேனும் காய்ச்சல், இருமல் மற்றும் சளி அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் அருகிலுள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு அங்கிகாரம் பெற்றுள்ள பரிசோதனை கூடங்களுக்கு மட்டுமே சென்று சளி பரிசோதனை செய்து கொள்ளலாம். என கலெக்டர் தெரிவித்தார்.

More News >>