கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா.. சுகாதார எமர்ஜென்சியை அறிவிக்க ஐஎம்ஏ கோரிக்கை..!
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதைத் தொடர்ந்து உடனடியாக சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கேரள முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கிய தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. கடந்த மே மாதம் வரை நோயாளிகள் எண்ணிக்கை 500 க்கும் குறைவாகவே இருந்தது.
ஆனால் அதன் பின்னர் எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த வாரம் முதன்முதலாகத் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தது. பின்னர் 6 ஆயிரத்தையும், தற்போது 7 ஆயிரத்தையும் தாண்டி விட்டது. விரைவில் நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கமான ஐஎம்ஏ, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஒரு அவசர கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பது: கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதே பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்ட வாய்ப்புள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கேரளாவில் நிலைமை படு மோசமாகி விடும்.
எனவே கேரளாவில் உடனடியாக மருத்துவ அவசர நிலையைப் பிரகடனம் செய்யவேண்டும். நோயின் தீவிரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண பொது மக்களைப் போலவே சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நோய் பரவுவது கவலையளிக்கிறது. எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் பெரும் ஆபத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.