டிரம்ப் ஒரு பொய்யர்.. நேருக்கு நேர் விவாதத்தில் ஜோபிடன் கடும் தாக்கு..
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப்பும், ஜோ பிடனும் நேருக்கு நேர் மோதினர்.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
அந்த நாட்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒரே மேடையில் நேருக்கு நேராக விவாதிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸ் நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதிபர் வேட்பாளர்களின் விவாத நிகழ்ச்சி தள்ளிப் போடப்பட்டு வந்தது.
இந்நிலையில், அதிபர் வேட்பாளர்களின் முதல் விவாத நிகழ்ச்சி நேற்றிரவு(செப்.29) தொடங்கியது. ஒகியோ மாகாணத்தில் கிளேவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப், ஜோ பிடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இந்த விவாதம் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.தொடக்கத்தில் டிரம்ப்பிடம், எப்படி இருக்கிறீர்கள்? என்று நலம் விசாரித்த ஜோ பிடன், அதற்குப் பிறகு டிரம்ப்பை போட்டுத் தாக்கினார். தான் வருமான வரிகளை முழுமையாகச் செலுத்தி விட்டதாக ஆவணங்களைக் காட்டிய பிடன், அதிபர் டிரம்ப் பல லட்சம் ரூபாய் வருமான வரிப் பாக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பிடன் பேசுகையில், இன்று கோவிட் 19 தொற்றினால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.
டைனிங் ஹால்களில் மக்கள் மகிழ்ச்சியாக உரையாடி அமர்ந்த காட்சிகள் மறைந்து, காலியாக காட்சியளிக்கின்றன. டிரம்ப் ஒரு பொய்யர். அவர் சொல்லும் ஒவ்வொன்றும் பொய்தான். அவர் சொல்லும் பொய்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக நான் இங்கு வரவில்லை என்று சரமாரியாகப் போட்டுத் தாக்கினார். மேலும், ஆட்சி முடியும் தருவாயில் சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிய நீதிபதியை எப்படி டிரம்ப் நியமிக்கலாம் என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த டிரம்ப், தேர்தலில் நாங்கள் வென்றோம், வெள்ளை மாளிகை அதிகாரம் இருக்கிறது. செனட் சபை இருக்கிறது. இது எல்லாமே வழக்கமான நடைமுறைதானே. அப்படித்தான் நீதிபதி நியமனமும் என்றார். தொடர்ந்து அவர் கொரோனா தடுப்பு பணிகளைக் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் அவர் கூறுகையில், ஜோ பிடன் இந்த நாட்டை மூட வேண்டும் என்கிறார். நான் திறந்து வைத்திருக்க விரும்புகிறேன் என்று ஊரடங்கு பற்றிக் குறிப்பிட்டார்.