வெங்கய்ய நாயுடுவுக்கு கொரோனா தொற்று.. நலமாக உள்ளதாக மகள் தகவல்..

துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு சி.டி. ஸ்கேன் பார்த்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவரது மகள் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சமீபத்தில் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஒவ்வொருவரின் இருக்கையிலும் கண்ணாடி தடுப்புகளும் அமைக்கப்பட்டன. கடந்த 23ம் தேதியன்று கூட்டத் தொடர் முடிவுற்றது.

இந்நிலையில், ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கய்யநாயுடுவுக்கு கொரோனா பாதித்துள்ளது. இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், துணை ஜனாதிபதிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டிருப்பதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது மனைவி உஷா நாயுடுவுக்குப் பரிசோதித்ததில் கொரானோ அறிகுறி இல்லை என்றாலும் அவரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கய்யநாயுடுவின் மகள் தீபா வெங்கட் கூறுகையில், எல்லோரும் அப்பாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்கள். அனைவருக்கும் நன்றி. அப்பாவுக்கு சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. மார்பு மற்றும் நுரையீரல்களில் எந்தவிதமான பாதிப்பு அறிகுறியுமே இல்லை. கடவுளின் கிருபையால், உடல் நலம் நன்றாக இருக்கிறது. கொரோனாவின் ஆரம்பக்கட்ட அறிகுறி மட்டுமே தென்பட்டது. அதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றார்.

More News >>