உள்ளங்கை போதும்: அமேசான் ஒன் புதிய முறை அறிமுகம்..!

கருவியை தொடாமல் உள்ளங்கையைக் காட்டுவதன் மூலம் பணம் செலுத்தவும், குறிப்பிட்ட கட்டடத்துக்குள் செல்ல அனுமதி பெறவும் முடியும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது உலகமெங்கும் கோவிட்-19 கிருமி பரவலின் காரணமாக சமூக இடைவெளி மற்றும் பணமில்லா பரிவர்த்தனை ஆகியவை அறிவுறுத்தப்படுகின்றன. அமேசான் அங்காடிகளில் பணமில்லா பரிவர்த்தனைக்கு உதவும் வகையில் அமேசான் ஒன் என்ற புதிய முறையை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பல்வேறு படிமுறைகள் (அல்காரிதம்) மற்றும் சாதனங்களைப் பயன்படுத்தி ஒருவரின் தனித்துவமான உள்ளங்கை விவரங்களைக் கொண்டு அடையாளம் காணும் வகையில் அமேசான் ஒன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமேசான் ஒன் கருவியில் ஒருமுறை ஒருவரின் உள்ளங்கை பதியப்பெற்றால் எந்த அமேசான் கோ அங்காடிகளிலும் உள்ளங்கையைக் காட்டிவிட்டு நுழைந்துவிடலாம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் முதன்முறையாக சியாட்டிலில் இரு அமேசான் கோ அங்காடிகளில் இது சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

அலுவலக நுழைவு அனுமதி, ஸ்டேடியம் மற்றும் அரங்கங்களுக்குள் செல்ல அனுமதி, சில்லறை விற்பனை கூடங்களில் பரிவர்த்தனை போன்ற பல பயன்பாடுகளை இதன் மூலம் பெறலாம் என்று கூறியுள்ள அமேசான் நிறுவனம், இச்சேவையை ஏனைய மூன்றாம் நபர் நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு வழங்குவது குறித்துத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

More News >>