மருத்துவமனையில் இளையராஜாவுக்கு முத்தமிட்ட எஸ்பிபியின் நெகிழ்ச்சி.. கொரோனா வைரஸாலும் அசைக்க முடியாத நட்பு என உருக்கம்..
திரைப்பட பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லேசான காய்ச்சல் தொற்று அறிகுறி இருப்பதாகவே எஸ்பிபி தெரிவித்திருந்தார். சில நாட்களில் திடீரென்று அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் கூட்டுப்பிரார்த்தனை நடத்தினார்கள். குறிப்பாக எஸ்பிபியின் நண்பர் இளைய ராஜா, எஸ்பிபி குணம் அடைய வேண்டி வீடியோ வெளியிட்டார்.
அதில், பாலு சீக்கிரம் எழுந்து வா. உனக்காக நான் காத்திருக்கிறேன். நாம் சண்டை போட்டாலும் நண்பர்கள்தான் சண்டை போடாவிட்டாலும் நண்பர்கள் தான் என்று கண்கலங்கி உருக்கமாகப் பேசி இருந்தார். கூட்டுப் பிரார்த்தனை, டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு எஸ்பிபி உடல்நிலை தேறியது. அவர் கண்விழித்தவுடன் திரையுலகினர் அவருக்காகச் செய்த பிரார்த்தனை பற்றி மகன் எஸ்பிபி சரண் தந்தையிடம் கூறினார். அதைக்கேட்டு நெகிழ்ச்சி அடைந்த எஸ்பிபி அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக லவ் யூ ஆல் என்று எழுதினார்.
பிறகு எஸ்பிபிக்காக இளையராஜா பேசி வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள் வீடியோவை சரண் எஸ்பிபியிடம் காட்டினார். அதைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்த எஸ்பிபி அந்த வீடியோவை அருகில் கொண்டு வரச் சொல்லி அதற்கு முத்தமிட்டார். இந்த தகவலை டாக்டர் தீபக் சக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார். இளையராஜாவின் வீடியோவுக்கு எஸ்பிபி முத்தமிட்ட தகவல் தற்போது வெளியானதைக் கேட்டு பலரும் கண்ணீரில் ஆழ்ந்தனர். கொரோனாவாலும் அவர்களின் நட்பை அசைத்துப் பார்க்க முடியவில்லை என்று கருத்து பகிர்ந்து வருகின்றனர்.பின்னர் கடந்த செப்டம்பர் 25ம் தேதி எஸ்பிபி காலமானார். அவரது மரணத்துக்கு மறுநாளே திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்ற இளையராஜா எஸ்பிபிக்காக மோட்ச தீபம் ஏற்றினார்.