சம்பளத்தை பாதியாக குறைத்த சூப்பர் ஸ்டார்..!
மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது புதிய படத்தில் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்துள்ளார். அதே வேளையில் இரண்டு இளம் நடிகர்கள் சம்பளத்தை கூட்டியது மலையாள சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா ஏற்படுத்திய தாக்கம் சினிமா உலகையும் விட்டுவைக்கவில்லை. கடந்த 5 மாதங்களுக்கு மேலாகப் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டதாலும், தியேட்டர்களில் சினிமா ரிலீஸ் ஆகாததாலும் பல ஆயிரம் கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது சினிமா உலகம்.
லாக் டவுனுக்கு முன்பு பல கோடி செலவில் தொடங்கப்பட்ட பிக் பட்ஜெட், லோ பட்ஜெட் படங்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன. தற்போது மெல்ல மெல்ல படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளபோதிலும் ஏற்பட்டுள்ள கடும் நஷ்டத்தை இப்போதைக்கு ஈடுகட்ட முடியாத நிலை உள்ளது. ஓரளவு நிலைமையை சமாளிக்க வேண்டுமென்றால் நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர்களுக்குக் கோரிக்கை விடுத்தது. அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சம்பளத்தை குறைக்காவிட்டால் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த வேண்டுகோளுக்கு நடிகர்கள் சங்கம் செவி சாய்த்தது. சம்பளத்தைக் குறைக்கத் தயார் என்று மலையாள நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திற்கு உறுதியளித்தது. இதன்படி மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது புதிய படத்திற்கான சம்பளத்தைப் பாதியாகக் குறைத்துள்ளார். இவர் தற்போது திரிஷ்யம் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்தப் படத்தையும் திரிஷ்யம் முதல் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் டைரக்ட் செய்கிறார்.
சூப்பர் ஸ்டாரான மோகன்லால் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்து விட்ட போதிலும் மலையாளத்தின் இரண்டு இளம் நடிகர்கள் தங்களது சம்பளத்தை அதிரடியாக கூட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனாவுக்கு முன்பு 40 லட்சம் சம்பளம் வாங்கிய ஒரு இளம் நடிகர் தற்போது ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்திற்கு 50 லட்சமும், 75 லட்சம் சம்பளம் வாங்கிய இன்னொரு நடிகர் 1 கோடியும் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டாரான மோகன்லாலே சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த நிலையில், இளம் நடிகர்கள் சம்பளத்தைக் கூட்டியது சினிமா தயாரிப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்தப் பட தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.