இந்தியாவில் இது வரை 62 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு..
இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழப்பு 97 ஆயிரத்தை கடந்து விட்டது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இது வரை 3.38 கோடி பேருக்கு நோய் பாதித்த நிலையில், 10.12 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
நோய் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியா, 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அமெரிக்காவில் 74 லட்சம் பேருக்கு தொற்று பாதித்த நிலையில், 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் 47 லட்சம் பேருக்கு தொற்று பாதித்த நிலையில், ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்து வருகிறது. நேற்று புதிதாக 80,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியது. நாடு முழுவதும் மொத்தம் 62 லட்சத்து 25,764 பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது. இவர்களில் 51 லட்சத்து 87,826 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 9 லட்சத்து 40,441 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1179 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 97,497 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.