ரஜினி நடித்த எந்திரன் பட வழக்குக்கு தடைகேட்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிரமாண்ட இயக்குனர்..
பிரமாண்ட இயக்குனர் என கோலிவுட்டில் அழைக்கப்படுபவர் ஷங்கர்.ஜென்டில்மேன், ஜீன்ஸ், இந்தியன், அந்நியன் என இவர் எடுத்த எல்லா படங்களிலும் பிரமாண்ட அரங்குகள் இடம்பெறுவதுடன் கதையும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும். ரஜினியுடன் இணைந்து சிவாஜி, எந்திரன், 2.0 என 3 படங்கள் தந்திருக்கிறார் ஷங்கர்.
நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் எந்திரன். இது தமிழ்ப் படத்தில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தையும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான காட்சிகளும் இடம்பெற்றன. இப்படம் வெளியாகி ஹிட் ஆனது. ஷங்கர் இயக்கிய எந்திரன் படக் கதை தான் எழுதியது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்தார்.
அதில்,ஜூகிபா என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் 1996-ம் ஆண்டு தொடர் கதை எழுதினேன். அக்கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், எந்திரன் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார். இது காப்புரிமையை மீறிய செயல் எனது உழைப்பு எடுத்துகையாளப்பட்டிருக்கிறது. அதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் கூறப்படிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல, எனவே வழக்கைத் தள்ளுபடி செய்யும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கவும் வேண்டும் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கூறியதுடன் தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது. தற்போது ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் சார்பில் எந்திரன் படக் கதைக்கு உரிமை கொண்டாடும் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.