பேய் விரட்டுவதாக கூறி 3 வயது சிறுமி அடித்துக்கொலை... போலி மந்திரவாதி கைது..!

பெங்களூரு அருகே பேய் விரட்டுவதாகக் கூறி 3 வயது சிறுமியை அடித்துக்கொன்ற சம்பவத்தில் போலி மந்திரவாதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் பவின். இவரது மனைவி பேபி. பவின் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் பூர்விகா என்ற மகள் உண்டு. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பூர்விகா இரவில் தூங்கும் போது திடீர் திடீரென எழுந்து அழுததாகக் கூறப்படுகிறது. இதனால் தங்களது மகளுக்குப் பேய் பிடித்திருக்கலாம் என இவர்கள் கருதியுள்ளனர்.

இதையடுத்து இருவரும் பூர்விகாவை அழைத்துக் கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த புருஷோத்தம் (19) என்பவரிடம் சென்றனர். அந்த வாலிபர் தனக்குத் தெரிந்த ராகேஷ் (21) என்ற ஒரு மந்திரவாதி இருப்பதாகவும் அவரிடம் அழைத்துச் சென்றால் பேயை விரட்டி விடுவார் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து புருஷோத்தம், அந்தக் குழந்தையையும், பெற்றோரையும் அந்த கிராமத்தில் ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் தங்கியுள்ள மந்திரவாதி ராகேஷிடம் அழைத்துச் சென்றார்.

அந்த சிறுமியைப் பரிசோதித்த மந்திரவாதி ராகேஷ், சிறுமியின் உடலில் பேய் குடி புகுந்திருப்பதாகவும், அதைத் தனது மந்திரத்தால் உடனடியாக விரட்டித் தருவதாகவும் கூறியுள்ளார். மந்திரவாதி கூறியதை அந்த சிறுமியின் பெற்றோர் நம்பி விட்டனர். பின்னர் சிறுமியை மந்திரவாதி ராகேஷ் தனது குடிலுக்குள் அழைத்துச் சென்றார். பவுனையும், பேபியையும் வெளியே இருக்குமாறு கூறி உள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுமி கதறி அழும் குரல் கேட்டது. ஒரு மணி நேரம் வரை அந்த சிறுமியின் அழுகுரல் கேட்டது. அதன் பின்னர் அந்த குழந்தையை மயங்கிய நிலையில் வெளியே கொண்டு வந்த மந்திரவாதி, பேயை விரட்டி விட்டதாகவும், வீட்டுக்குச் சென்ற பின்னர் மயக்கம் தெளிந்து விடும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பி அவர்கள் இருவரும் பூர்விகாவை வீட்டுக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வீட்டுக்குச் சென்ற பல மணி நேரமாகியும் அந்த சிறுமிக்கு மயக்கம் தெளியவில்லை. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது அந்த சிறுமி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் சிக்கஜூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி மந்திரவாதி ராகேஷ் மற்றும் புருஷோத்தம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

More News >>