கொரோனா தடுப்பூசிக்காக 5 லட்சத்திற்கும் மேல் சுறாக்களை கொல்ல வேண்டி வருமாம்...

கொரோனா தடுப்பூசிக்காக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுறாக்களைக் கொல்ல வேண்டி வரும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.உலகம் முழுவதிலும் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இருந்து வரும் கொரோனா பீதி இன்னும் குறையவில்லை. தற்போதைய நிலவரப்படி உலகத்தில் இதுவரை 3 கோடியே 38 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் நோயாளிகள் எண்ணிக்கை 62 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தைக் கடந்து விட்டது.உலகம் முழுவதும் நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து உட்பட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்காக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுறாக்களைக் கொல்ல வேண்டி வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சுறாக்களின் கல்லீரலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஸ்குவாலைன் என்ற எண்ணெய் தடுப்பூசி தயாரிப்புக்குத் தேவையான ஒரு முக்கியமான மூலப்பொருள் ஆகும். ஒரு டன் ஸ்குவாலைன் எண்ணெய் உற்பத்தி செய்ய 3000 சுறாக்களைக் கொல்ல வேண்டி வரும். உலகில் அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பு மருந்தைக் கொடுக்க வேண்டுமென்றால் இரண்டரை லட்சம் சுறாக்களைக் கொல்ல வேண்டும். 2 டோஸ் மருந்து கொடுக்க வேண்டும் என்றால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுறாக்களைக் கொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இங்கிலாந்து மருந்து கம்பெனியான கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு ஊசிகளில் சுறாக்களின் கல்லீரலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ஸ்குவாலைனை பயன்படுத்துகின்றது. இந்த நிறுவனமும் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே சுறாக்களைக் கொல்வதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. கொரோனா எவ்வளவு நாள் உலகத்தில் நீண்டு நிற்கும் எனத் தெரியாது. அதற்காகச் சுறாக்களைக் கூட்டத்தோடு கொல்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று சுறா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

More News >>