அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி பறந்ததால் பரபரப்பு
பழனியில், அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் பேருந்து நிலையம் அருகில் அதிமுகவின் கொடி கம்பம் உள்ளது. இதில், அதிமுகவின் கொடி பறக்கவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதிமுகவின் கம்பத்தில் திடீரென பாஜகவின் கொடி பறக்கவிடப்பட்டு உள்ளது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இரண்டு பிரிவுகளாக அதிமுக பிளந்தது. முதல்வர் பதவி வகிப்பதில் ஓ.பி.எஸ்க்கும், சசிகலாவிற்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால், முதல்வர் பதவியில் இருந்த ஓ.பி.எஸ் ராஜினாமா செய்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். எதிரணியாக இருந்த ஓபிஎஸ் பின்னர் பழனிசாமியுடன் இணைந்தார். மோடி அறிவுறுத்தியதால் தான் எடப்பாடியுடன் இணைந்தேன் என ஓபிஎஸ் சமீபத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அதிமுகவை ஆட்டி வைப்பது மத்தியில் ஆளும் பாஜக அரசு தான் என பரவலாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுக கொடி கம்பத்தில் பாஜகவின் கொடி பறக்கவிட்டு இருப்பது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிமுகவினர் போலீஸில் புகார் தெரிவித்தனர். பாஜக கொடி ஏற்றிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com