கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய கேரளா..!
தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் இன்று கேரளா தமிழகத்தை பின்னுக்கு தள்ளியது. இன்று ஒரே நாளில் 8,830 பேருக்கு நோய் பரவியுள்ளது.இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதலில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவிலுள்ள வுஹானிலிருந்து வந்த 3 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு முதலில் நோய் உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து இவர்களுக்கு நோய் குணமானது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள் இருந்தது. கடந்த மே மாதத்தில் வெறும் 16 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். ஆனால் பின்னர் மீண்டும் நோய் பரவத்தொடங்கியது.
முதலில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 100களில் இருந்தது. பின்னர் நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை முதன் முதலாக 5 ஆயிரத்தைக் கடந்தது. இதன் பின்னர் 6 ஆயிரத்தையும், தொடர்ந்து 7 ஆயிரத்தையும், இன்று 8 ஆயிரத்தையும் கடந்துவிட்டது. இன்று ஒரே நாளில் 8,830 பேருக்கு நோய் பரவியுள்ளது.
கேரளாவில் நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அம்மாநில சுகாதாரத் துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோயைக் கட்டுப்படுத்த கேரளாவில் சுகாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கேரள அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.