ரத யாத்திரையை தடை செய்யாமல் தமிழக தலைவர்களை கைது செய்வதா ? - ஆம்ஆத்மி கண்டனம்
மதவெறியை தமிழகத்தில் தூண்டி அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கும் விஎச்பி ரத யாத்திரையை தடை செய்யாமல் மதநல்லிணக்கம் காக்க போராடும் தமிழக தலைவர்களை கைது செய்வதா, தமிழக அரசுக்கு ஆம்ஆத்மிகட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆம்ஆத்மிகட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் S.A.N.வசீகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாரதிய ஜனதா கட்சி துணை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தமிழகத்திற்குள் ராமராஜ்ஜிய ரத யாத்திரை என்ற பெயரில் பிரச்சாரப் பயணம் துவங்கியுள்ளது.
நேற்று (மார்ச் 20) செங்கோட்டை வழியாக இந்த ரத யாத்திரை தமிழகத்தில் நுழைந்துள்ளது. அயோத்தி நகரில் ஆர்எஸ்எஸ் தலைமையிலான கும்பல்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டுமென்று வற்புறுத்தி இந்தப் பிரச்சாரத்தை நடத்துகிற விஎச்பி, மதநல்லிணக்கத்துடன் அமைதியாகத் திகழும் தமிழ்நாட்டை கலவர பூமியாக்கிட முயற்சிக்கிறது இது அமைதியாக இருக்கும் தமிழகத்தை சிர்குலைக்கும் வேலையாகும்..
மத்திய பாஜக மோடி அரசின் துணை அரசாக தமிழக அதிமுக அரசு செயல்படுகிறது, தமிழகத்தில் மதநல்லிணக்கத்தைப் காக்க வேண்டிய தமிழக அரசு, மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் விஎச்பியின் நடவடிக்கைக்கு துணைபோவது வன்மையாக கண்டிக்கதக்கது.
மக்களை பிளவுபடுத்தும் தீய நோக்கமுள்ள இந்த யாத்திரைக்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கியுள்ள தமிழக அரசு, அதே நேரத்தில் இதற்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளின் தலைவர்களையும், மதநல்லிணக்கம் விரும்புவோரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ற பெயரில் கைது செய்து வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com