சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது உடல் எடையை குறைக்கும் பாகற்காயின் இனிப்பான பலன்கள்

கசப்பு சுவைக்கு உதாரணமாகச் சிறுவயதில் பாகற்காயை அறிந்திருப்போம். பாகற்காயின் சுவைதான் கசப்பே தவிர அது தரும் பலன்கள் இனியவை. வாழ்வியல் முறையின் காரணமான நோய்களுக்கு நாம் இலக்காகிவரும் இக்காலத்தில் பெரும்பாலான வாழ்வியல் மாற்றக் குறைபாடுகளில் நாம் சிக்குவதைப் பாகற்காய் தடுக்கிறது.

பாகற்காயில் இருக்கும் சத்துகள்

பாகற்காயில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் அடங்கியுள்ளன. இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கன் 'ஏ' மற்றும் 'சி' ஆகியவையும் இதில் நிறைந்துள்ளன. சுண்ணாம்பு சத்து, பீட்டா-கரோட்டின் உள்ளிட்டவையும் பல்வேறு ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) மற்றும் உடலில் அழற்சி ஏற்படாமல் தடுக்கும் இயல்புகள் ஆகியவை பாகற்காயில் உள்ளன. பீட்டா-கரோட்டின், வைட்டமின் 'ஏ' ஆக மாறி நமக்கு நன்மை செய்யும்.

பொது மருத்துவ பண்புகள்

பாகற்காய் உடலுக்குத் தீமை செய்யக்கூடிய கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் பாகற்காய் தடுக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாகக் காக்கிறது. நம் உடலின் தோலை நன்றாகப் பராமரிப்பதால் முதுமையான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.

நீரிழிவு

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கக்கூடிய சாரன்டின் (charantin) என்ற வேதிப்பொருள், பாகற்காயில் உள்ளது. நீரிழிவுக்கு எதிராகச் செயல்படும் பண்பு இதற்கு உண்டு. உடல் கிரகிக்கும் சர்க்கரையை முற்றிலும் செலவிடச் செய்வதன் மூலமும் உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டோபாலிஸம்) ஒழுங்குபடுத்துவதன் மூலமும் இன்சுலினின் அளவு தாறுமாறாக ஏறி இறங்குவதைக் கட்டுப்படுத்துகிறது. உடலின் சர்க்கரை அளவை பாதிக்கக்கூடிய கார்போஹைடிரேடின் அளவு இதில் குறைவு என்பதை இதன் கிளைசெமிக் குறியீடு காட்டுகிறது. குறைந்த கிளை செமிக் குறியீடு கொண்டிருப்பதால் இன்சுலின் சுரப்பு குறைவான இரண்டாம் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோருக்குப் பயனளிக்கும்.

செரிமானம்

பாகற்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. ஆகவே, தொடர்ந்து பாகற்காய் சாப்பிடு வந்தால் மலச்சிக்கல் தீரும். ஜீரண கோளாறுகள் நீங்கும். நம் வயிற்றிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்குப் பாகற்காய் உதவி செய்கிறது. இதன் மூலம் செரிமானம் நன்றாக நடப்பதுடன், உடல் உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை கிரகித்துக்கொள்ள முடிகிறது.

உடல் எடை

பாகற்காயில் கலோரி (ஆற்றல்), கொழுப்பு மற்றும் கார்போஹைடிரேடு இவை குறைவாக உள்ளன. ஆகவே, பாகற்காயைச் சாப்பிட்டால் வயிற்றில் திருப்தியான உணர்வு ஏற்படும். உணவை அதிகமாகச் சாப்பிட இயலாது. பாகற்காய் ஈரலின் செயல்பாட்டைத் தூண்டு பித்த அமிலங்கள் சுரப்பை அதிகப்படுத்துகிறது. உடலிலுள்ள கொழுப்பு சிதைக்கப்படுவதற்குப் பித்த அமிலங்கள் உதவுகின்றன. பாகற்காயில் 80 முதல் 85 சதவீதம் தண்ணீர் இருப்பதால் பசியை அடக்குகிறது; உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டோபாலிஸம்) அதிகரிக்கிறது.

பாகற்காயை எப்படிச் சாப்பிடலாம்?

பாகற்காயை நறுக்கி துண்டுகள் மேல் உப்பு தூவி 10 நிமிடங்கள் வைத்திருந்தால் அதன் கசப்பு குறையும்.

பாகற்காயை சில நிமிடங்கள் புளி கரைசலில் ஊற வைக்கலாம்.

சர்க்கரை மற்றும் வினீகரை சம அளவு எடுத்துக் கொதிக்கவைத்து, அக்கரைசலில் பாகற்காயை ஊற வைக்கலாம்.

பாகற்காயை ஆலிவ் எண்ணெய்யில் வதக்கலாம்.

More News >>