வேளாண் சட்டங்களை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு..

புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி. திருச்சி சிவா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார்.திருச்சி சிவா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகியவை விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும், இவை இந்திய அரசியலமைப்புக்கு முரணாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கான அதிகாரம் மற்றும் பாதுகாப்பு என்பது முற்றிலும் பறிக்கப்படுகிறது. விவசாயிகளின் உரிமைகளைப் பறித்து, கார்ப்பரேட்களின் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

மாநிலங்களின் பட்டியலில் வேளாண்மை உள்ளது. எனவே, மாநிலங்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு ஒப்புதல் பெறாமல் மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்களை இயற்றியது தவறு. அது அரசியலமைப்பு சட்டப் பிரிவு 246ல் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக உள்ளது. மேலும், மாநிலங்களவையில் சட்டங்களை அவசர, அவசரமாகக் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியதும் தவறானது.

விளைபொருள் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான சட்டம், விவசாயிகள் விளைபொருட்கள் வணிக மேம்பாட்டுச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகியவை முழுமையாக விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. எனவே, இவற்றை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

More News >>