நாடு முழுவதும் 7.5 கோடி கொரோனா பரிசோதனை.. ஐ.சி.எம்.ஆர் தகவல்..
நாடு முழுவதும் இது வரை ஏழரை கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.இந்தியாவில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்து வருகிறது. நேற்று முன் தினம் 80 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்றும் சுமார் 80 ஆயிரம் பேருக்கு நோய் பாதித்துள்ளது.
இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 63 லட்சத்தை எட்டியுள்ளது. இவர்களில் 52 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 9 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு நாடு முழுவதும் மொத்தம் 98 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐசிஎம்ஆர்) இன்று(அக்.1) வெளியிட்ட அறிக்கையில், இது வரை ஏழரை கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும் இது வரை ஏழு கோடியே 56 லட்சத்து 19 ஆயிரத்து 981 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நேற்று (செப்.30) ஒரே நாளில் 14 லட்சத்து 23,052 பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது. அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதால், நோய்ப் பாதிப்பு அதிகமாகக் கண்டுபிடிக்கப்படுகிறது.
அதே சமயம், நோயில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களை விட அதிகமாகி உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது வரை 71 லட்சத்து 35,878 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மட்டும் 85,058 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.