யோகியை ராமர் கோயில் வேலைக்கு அனுப்புங்க.. மாயாவதி காட்டம்..
யோகி ஆதித்யநாத்தை ராஜினாமா செய்யச் சொல்லி, ராமர் கோயில் கட்டும் பணிக்கு அனுப்புங்கள் என்று மத்திய அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீப காலமாக அதிகளவில் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஹாத்ராஸ் பகுதியில் 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொல்லப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் 8 வயது சிறுமி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று(அக்.1) அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: உ.பி.யில் மாபியா கும்பல்களும், ரவுடிகளும், பலாத்கார குற்றவாளிகளும் சுதந்திரமாக உலா வருகிறார்கள். ஹாத்ராஸ் சம்பவத்தில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தால், பலராம்பூரில் தலித் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு அடுத்த சம்பவம் நடந்துள்ளது.மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்காத நாளே இல்லை. பெண்களை பாதுகாக்கும் சக்தி இல்லாத அரசாக பாஜக அரசு இருக்கிறது. யோகி ஆதித்யநாத்தால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை என்றால் பதவி விலக வேண்டும். அவர் எங்கிருந்து வந்தாரோ அதே கோரக்பூர் மடத்திற்கு அனுப்ப வேண்டும். அல்லது ராமர் கோயில் கட்டும் பணிக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.