மத்திய அரசு முடிவை ஏற்று அக்டோபர் 15ல் தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு பரிசீலனை.. விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீஸ் எப்போது?
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் , பூங்காக்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 5 மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு தொடர்கிறது. திரைக்குவர தயாராக இருந்த படங்கள் இதனால் வெளியிட முடியாமல் தடைபட்டது. விஜய் நடித்துள்ள மாஸ்டர், தனுஷ் நடித்திருக்கும் ஜெகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதற்கிடையில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் ஒடிடியில் ரிலீஸ் செய்ய விற்கப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சினிமா தியேட்டர்களை திறக்கவும் அனுமதி கோரப்பட்டு வந்தது. தற்போது அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
சென்ற ஜூன் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போது மத்திய அரசு புதிய தளர்வுகள் அறிவித்துள்ளது. அதில், நாடு முழுவதும் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்களை 50 சதவிகித இருக்கைகளுடன் அக்.15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. பொழுது போக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள் திறக்கலாம் போன்ற முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.சில நாட்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் அக்டோபர் முழுவதும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடையாது என தெரிவித்திருந்தது. இந்நிலையில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மத்திய அரசின் அறிவிப்பு வழிகாட்டுதலை பின்பற்றி தமிழகத்தில் விரைவில் தியேடர்கள் திறப்பு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதன்படி தமிழகத்திலும் இந்த மாதம் முதலே சினிமா தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட விரைவில் மாநில அரசு அனுமதி தரும் என்று தெரிகிறது. இது ரசிகர்களையும், திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆனால் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அநேகமாக இப்படம் நவம்பரில் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று தெரிகிறது.