இப்படியும் ஒரு நடிகர்...! படம் வெளியாகி லாபம் கிடைத்தால் மட்டும் சம்பளம் தந்தால் போதும்..!
கொரோனா காரணமாகத் தயாரிப்பாளர்கள் கடும் சிரமத்தில் இருப்பதால் படம் வெளியாகி லாபம் கிடைத்தால் மட்டும் தனக்குச் சம்பளம் தந்தால் போதும் என்று பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கூறியுள்ளார்.கொரோனா காரணமாக சினிமா துறைக்கு ஏற்பட்ட நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. கடந்த 6 மாதங்களுக்கு மேலாகப் படங்கள் எதுவும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாததால் இந்திய சினிமா துறைக்குப் பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தற்போது சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி விட்டாலும் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முடியாத நிலை உள்ளது. எனவே நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்தால் தான் புதிய படப்பிடிப்புகளைத் தொடங்க முடியும் என்று மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.குறிப்பாக முன்னணி நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது சம்பளத்தைப் பாதியாகக் குறைத்துள்ளார். தற்போது இவர் திரிஷ்யம் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே பேசப்பட்ட சம்பளத்திலிருந்து பாதி மட்டும் கொடுத்தால் போதும் என்று மோகன்லால் தெரிவித்துள்ளார்.ஆனால் மோகன்லால் ஒரு புறம் சம்பளத்தைப் பாதியாகக் குறைக்க, இன்னொரு புறம் பிரபல நடிகர்களான டொவினோ தாமஸ் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் சம்பளத்தை முன்பைவிட கூட்டியதாகத் தகவல்கள் வெளியாகின. டொவினோ தாமஸ் தனது அடுத்த படத்திற்குச் சம்பளத்தை 75 லட்சத்திலிருந்து 1 கோடியாகவும், ஜோஜு ஜார்ஜ் 40 லட்சத்திலிருந்து 50 லட்சமாகவும் உயர்த்தினார். இது மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து உடனடியாக அந்த படத்திற்கான படப்பிடிப்பை நிறுத்தி வைக்கவும், நடிகர்கள் இருவருக்கும் தடை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இந்நிலையில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் தனது சம்பளத்தை 50 லட்சத்திலிருந்து 30 லட்சமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளார். இதே போல டொவினோ தாமசும் தனது சம்பளத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளார். மேலும் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படம் வெளியாகி லாபம் கிடைத்தால் மட்டும் தனக்குச் சம்பளம் தந்தால் போதும் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ் மற்றும் டொவினோ தாமசின் இந்த அறிவிப்பு மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.