சினிமாவுக்கு வருகிறார் கிரிக்கெட் வீரர் தோனி.. எந்த ஹீரோவுக்கு போட்டி?
சினிமா நடிகர், நடிகைகள் சினிமாவில் மவுசு குறைந்தால் அரசியலுக்கு வருவதுபோல் கிரிக்கெட் வீரர்கள் மவுசு குறையும் காலகட்டத்தில் சினிமாவுக்கு வரத் தயாராகி வருகின்றனர்.ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ஃபிரண்ட்ஷிப் என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். முன்னதாக கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த தோனி தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி அடுத்து சினிமா மீது கண்வைத்திருக்கிறார். எந்த படத்தில் நடிக்கிறார் என்று கேட்டால் இப்போது தயாரிப்பு துறையில் தான் ஈடுபடுகிறார்.
தோனி என்டர்டெயின்மெண்ட் என்ற பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் தோனி, ஏற்கனவே சில ஆவணப் படங்களை இந்நிறுவனம் சார்பில் எடுத்துள்ளார். நேரடியாக சினிமா படத்துக்குப் பதிலாக வெப் சீரிஸ் தயாரிக்கிறார். தோனியின் பட நிறுவனத்தை அவரது மனைவி சாக்ஷி நிர்வாக இயக்குனர் பொறுப்பு ஏற்றுக் கவனிக்கிறார். அவர் கூறும்போது,தோனி என்டர்டெயின் மெண்ட் நிறுவன சார்பில் ஒரே நேரத்தில் 5 புதிய வெப் தொடர்களையும் தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
சைன்ஸ் தொடர்பான கதைகளை மையமாக வைத்து வெப் சீரிஸ் தயாரிக்க உள்ளோம். அதற்கான பேச்சு வார்த்தை நடக்கிறது, இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றார்.வெப் சீரிஸ் தயாரிக்கும் அளவுக்கு நெருங்கி வந்திருக்கும் தோனி ஹீரோவாக நடிக்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நெட்டிஸன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.