தலைவலி கொரோனாவின் அறிகுறியா? எப்படி தெரிந்துகொள்ளலாம்?

கோவிட்-19 கிருமி உலக நாடுகளில் இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது. SARS-CoV-2 கிருமி பாதிப்பின் அறிகுறிகளாகக் கூறப்படும் உடல் உபாதைகள் ஏதேனும் தென்பட்டால் மனதில், 'நமக்கும் கொரோனா இருக்குமோ?' என்ற சந்தேகம் எழும்புகிறது. கொள்ளைநோயாகிய கொரோனா பாதிப்பது உண்மையென்றாலும், அது ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமான அறிகுறிகளைக் காட்டுகிறது. 'கொரோனா வந்துவிட்டதோ?' என்ற சந்தேகத்தை எழுப்புவதில் தலைவலியும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வாழ்வியல் மாற்றங்கள்

முன்பு வருவதைக் காட்டிலும் அதிக அளவில் தலைவலி ஏற்பட்டதென்றால் கொரோனா அச்சம் எட்டிப்பார்க்கக்கூடும். கொரோனா ஊரடங்கு காரணமான தொழில், வேலை பாதிப்பு காரணமாகவும் தலைவலி வரக்கூடும். வீட்டிலிருந்து வேலை செய்தல், வேலை அல்லது தொழிலில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல், கொரோனாவை குறித்த அச்சம் என்று பல்வேறு சிந்தனைகளில் மனம் உழல்வதும் தலைவலியைக் கொண்டுவரக்கூடும்.

தொற்றுநோயாகிய கொரோனாவின் காரணமாக வாழ்க்கை முறை பெரிதும் மாறியுள்ளது. வழக்கமாகச் செய்யும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் ஆகியவை தடைப்பட்டிருக்கலாம்; வீட்டிலேயே பெரும்பாலும் இருப்பதால் மொபைல், கணினி ஆகியவற்றை அதிக நேரம் பார்க்கலாம்; உறங்கும் நேரம், படுக்கைக்குச் செல்லும் நேரம் இவற்றில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இவையும் தலைவலியை ஏற்படுத்தக்கூடியவை.

கொரோனாவும் தலைவலியும்

இதுவரை இல்லாதவிதத்தில் வித்தியாசமாக தலைவலித்தால் ஐயம் ஏற்படவே செய்யும். ஆனால் வறட்டு இருமல், காய்ச்சல், அதிக சோர்வு, சுவை மற்றும் வாசனையை உணர இயலாமை போன்றவையே கோவிட்-19 பாதிப்பின் பொது அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி கொரோனா பாதிப்புள்ளவர்களில் ஏறத்தாழ 14 சதவீதத்தினருக்கு மட்டுமே தலைவலி ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

தலைவலியால் கொரோனா குறித்த அச்சம் கொள்வதற்கு முன்பாக வேலைப் பளு, வேலை, தொழில் குறித்த மன அழுத்தம், மொபைல் போனை அதிக நேரம் பார்ப்பது போன்ற வேறு ஏதாவது காரணத்தினால் தலைவலி ஏற்படுகிறதா என்று நிதானிப்பது அவசியம். தலைவலியுடன், கோவிட்-19 பாதிப்பின் அறிகுறிகளாகக் கூறப்படும் வறட்டு இருமல், காய்ச்சல், அசதி, சுவை மற்றும் மணத்தை உணர இயலாமை போன்ற ஏதாவது ஓர் அறிகுறியும் இருக்கிறதா என்று கவனிக்கவேண்டும்.

கொரோனா பாதிப்பினால் வரும் தலைவலி, தலையை இறுக்கிப் பிடிப்பது போன்று அல்லது கசக்கிப் பிழிவது போன்ற உணர்வைத் தரும் என்று கூறப்படுகிறது. கோவிட்-19 பாதிப்பின் காரணமாக உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் அளவுக்கதிகமாக தூண்டப்படுவதால் ஏற்படும் 'சைட்டோகைன் புயல்' காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது என்ற வல்லுநர்கள் கருதுகிறார்கள். சைட்டோகைன் புயல், அழற்சியையும் வலியையும் உருவாக்கக்கூடியது.

தலைவலியை மட்டும் கொரோனாவின் அறிகுறியாக எண்ணிக் கலங்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், முன்பு இல்லாத வண்ணம் தலைவலி தீவிரமாக இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வது நல்லது.

More News >>