கேரளாவில் டிசம்பர் வரை தியேட்டர்கள் திறக்கப்படாது.. தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு...!
கேரளாவில் டிசம்பர் வரை சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட மாட்டாது என்று கேரள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அக்டோபர் 15-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்கலாம் என்றும், 50% ஆட்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள் திறப்பதை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று கொச்சியில் நடந்தது. கூட்டத்தில், தியேட்டர்களை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் கேரள சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் லிபர்டி பஷீர் கூறியது: இம்மாதம் 15-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கேரளாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் டிசம்பர் மாதம் வரை சினிமா தியேட்டர்களை திறப்பது என்பது நடக்காத காரியம் ஆகும். தியேட்டரில் சினிமா பார்க்க வரும் யாருக்காவது கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டால் பின்னர் அந்த தியேட்டரை மூட வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே எந்த வருமானமும் இல்லாமல் மூடப்பட்டுள்ள சினிமா தியேட்டர்களுக்கு லட்சக்கணக்கில் மின்சார கட்டணத்தைச் செலுத்தி வருகிறோம். மேலும் 50% பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால் எங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படும். எனவே தற்போதைய சூழ்நிலையில் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்களை திறக்க முடியாது என்று கூறினார்.