பிரமோஸ் ஏவுகணை, இரண்டாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதனை..!
400 கிலோ மீட்டர் தூரமுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறனுடன் உருவாக்கப்பட்ட , 'பிரமோஸ்' ஏவுகணை, ஒடிசாவில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது.எதிரிகளின் இலக்கு களை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட, பிரமோஸ் ஏவுகணைகளைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்து தயாரித்து வருகிறது. இவைகளை , நிலத்தில் இருந்து மட்டுமல்லாது போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் கப்பல்கள் ஆகியவற்றிலிருந்தும் இயக்க முடியும்.
இதுவரை உருவாக்கப்பட்ட இந்த ரக ஏவுகணைகள், 290 கி.மீ.,தூரத்தில் உள்ள இலக்கை, மட்டும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை தற்போது முதல்முறையாக, 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட பிரமோஸ் ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த புதிய பிரமோஸ் ஏவுகணை, ஒடிசாவில் பாலாசோரில், இரண்டாவது முறையாகப் பரிசோதிக்கப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர் குழுவினருக்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இந்த பிரமோஸ் ஏவுகணை இலக்கை தாக்கி அழிக்க உதவும் தொழில்நுட்பங்கள் நமது நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை எனவும் டாக்டர் சதீஷ் ரெட்டி கூறினார். இந்தியா – சீன இடையே எல்லையில் போர் பதற்றம் உருவாகியுள்ள சூழ் நிலையில் இந்த பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.