சென்னை உள்பட 15 மாவட்டங்களில் நீடிக்கும் கொரோனா பரவல்!
சென்னை, கோவை, சேலம் உள்பட 15 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று முன் தினம் புதிதாக 5659 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று (அக்.1) 5688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியுள்ளது. இது வரை 6 லட்சத்து 3290 பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது.
அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5516 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 47,335 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 66 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 9586 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 369 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் நேற்று புதிதாக 1289 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 180 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 68,689 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 356 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 260 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 35,946 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 32,622 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.
நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 550 பேருக்கும், சேலத்தில் 347 பேருக்கும், திருப்பூரில் 192 பேருக்கும், நாமக்கல் 111, தஞ்சாவூர் 232, திருவண்ணாமலை 122, கன்னியாகுமரி 118, கடலூர் 180, வேலூர் 146 மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 134 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.சென்னை, கோவை, சேலம் உள்பட 15 மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடிக்கிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் இது வரை 72 லட்சத்து 21,686 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. செப்.30ம் தேதி ஒரே நாளில் 85,808 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.