ராகுல், பிரியங்கா மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தில் உ.பி.போலீஸ் வழக்கு

ஹாத்ராஸில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு தடையை மீறிச் சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் நகரில் 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த பெண்ணின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று சென்றனர். ஆனால், அந்த ஊருக்குள் அவர்களை நுழைய விடாமல் எல்லையிலேயே அவர்களது வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.உடனே போலீசாருடன் ராகுலும், பிரியங்காவும் வாக்குவாதம் செய்தனர். அப்போது போலீசார், அந்த ஊரில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 144 தடையுத்தரவு போடப்பட்டிருப்பதாக கூறினர். ஆனால், ராகுலுடன் சென்ற உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்கள், போலீசார் பொய் சொல்லுவதாக கூறினர். இதையடுத்து, ராகுல்காந்தி போலீசாரிடம், 144 தடையுத்தரவு என்றால் வாகனம்தானே செல்லக் கூடாது. நான் நடந்தே செல்கிறேன். அதை தடுக்க உங்களுக்கு உரிமையில்லை என்று கூறி விட்டு, வேக,வேகமாக நடந்தார். அவரை பின்தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களும் சென்றனர். போலீசார் கோபமடைந்து ராகுல்காந்திக்கு முன்பாக ஓடிச் சென்று அவரை பிடித்து நிறுத்தினர். போலீசார் வேகமாக பிடித்து தள்ளிய போது ராகுல்காந்தி நிலைகுலைந்து கீழே விழுந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் உடனே போலீசாருடன் சண்டை போட்டனர்.

இதன்பின், ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். பின்னர், அவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறுகையில், வாகனத்தில் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். நாங்கள் நடந்து சென்றோம். அதை எப்படி தடுக்கலாம்? இந்த நாட்டில் மோடி ஜி மட்டுமே நடந்து செல்ல உரிமை உள்ளதா? சாதாரண மனிதர்கள் நடந்து செல்ல கூட தடை விதிப்பதா? என்றார்.இந்நிலையில், கவுதம புத்தர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் 150 காங்கிரஸ் தொண்டர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

More News >>