அறுவை சிகிச்சை செய்த சிறுமி பலி உறவினர்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு பயந்து டாக்டர் தற்கொலை.

கேரளாவில் கால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் 7 வயது சிறுமி திடீரென மரணமடைந்ததை தொடர்ந்து உறவினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மிரட்டலுக்கு பயந்து கை நரம்பை அறுத்து டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கடப்பாக்கடை என்ற பகுதியை சேர்ந்தவர் அனூப் கிருஷ்ணன் (37). ஆர்த்தோ டாக்டரான இவர் சொந்தமாக அப்பகுதியில் ஒரு எலும்பு சிகிச்சை மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவியும் டாக்டர் தான். இவர் கொல்லத்தில் வேறு ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு அனூப் கிருஷ்ணன் கால் அறுவை சிகிச்சை செய்தார். அப்போது திடீரென அந்த சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அந்த சிறுமியின் உறவினர்களிடம் அனூப் கிருஷ்ணன் கூறினார். உடனடியாக அந்த சிறுமியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுமி பரிதாபமாக இறந்தது.

இதையடுத்து டாக்டர் அனூப் கிருஷ்ணனின் தவறான சிகிச்சை தான் சிறுமி இறக்க காரணம் என்று கூறி அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த சிறுமியின் உடலை அனூப் கிருஷ்ணனின் மருத்துவமனைக்கு கொண்டு சென்று போராட்டம் நடத்த உறவினர்கள் தீர்மானித்தனர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். மேலும் சில அரசியல்வாதிகளும், அந்த சிறுமியின் உறவினர்களும் அனூப் கிருஷ்ணனை போனில் அழைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டாக்டர் அனூப் கிருஷ்ணன் தனது அறையில் கை நரம்பை அறுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சிறுமியின் உறவினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

More News >>