கொரோனாவுக்கு கூட அச்சப்படாத எடப்பாடிக்கு திமுகவை கண்டு பயம்.. ஸ்டாலின் பேச்சு.
திமுகவைக் கண்டால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் ஏற்படுகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அக்டோபர்-2 கிராம சபைகள் கிளர்ந்தெழட்டும் என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசியிருந்ததாவது:காந்தி அடிகள் பிறந்த நாளான, அக்.2ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். வேளாண் துறையைக் காப்பாற்றக் கட்சி வித்தியாசம் பாராமல் அனைவரும் இதனைச் செய்ய வேண்டும். மூன்று சட்டங்களுக்கும் எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் இருக்கிறது என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு காட்ட வேண்டும். இதற்கான முன்முயற்சிகளைத் திமுகவின் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டும் என்று பேசியிருந்தார்.
இதையடுத்து, கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து மாவட்டக் கலெக்டர்கள் மூலமாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தடையை மீறி கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் அறிக்கை வெளியிட்டார்.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொரட்டூர் ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக முடியும். கிராமங்களில் உள்ள மக்கள் பிரச்சினைகளை தீர்க்க கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் நிலைமை மோசமாக உள்ளது. இது பற்றி விவாதிக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசு ஏன் கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய உத்தரவிட்டது? கொரோனாவை பார்த்து கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் இல்லை. ஆனால், திமுகவைப் பார்த்து தான் அவர் அதிகமாக அச்சப்படுகிறார். அதிமுக செயற்குழுவில் அவ்வளவு கூட்டம் கூட்டிய போது பரவாத கொரோனா, இப்படி சமூக இடைவெளி விட்டு நடத்தும் கிராம சபைகளில் வந்து விடுமா? இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.