மலர் சாகுபடி செய்தும் மலர்ச்சி இல்லையே . நிம்மதி இழந்த நிலக்கோட்டை விவசாயிகள்.

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யில் உள்ளபூ மார்க்கெட் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. நிலக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மல்லிகை, முல்லை, , கனகாம்பரம், செண்டு, சம்பங்கி உட்பட பல்வேறு ரக பூக்கள் இந்த சந்தையில் அமோகமாக விற்பனையாகும். இங்கு விற்பனையாகும் பூக்கள் தமிழகத்தில் கோவை, தஞ்சை, திருப்பூர், சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கும் கேரளா, கர்நாடகா, கோவா வெளி மாநிலங்களுக்கும் மற்றும் சிங்கப்பூர் , மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பலமாதங்கள் இந்த பூ மார்க்கெட் மூடப்பட்டு இருந்ததால் இப்பகுதி விவசாயிகள் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர். ஒரு சில வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஓரளவு பூக்களை விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பூ மார்க்கெட் வழக்கம்போல் இயங்கினாலும் பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்கின்றனர் விவசாயிகள்.தற்போது புரட்டாசி மாதம், முகூர்த்த நாள் மற்றும் திருவிழாக்கள் இல்லை என்பதால் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோவிற்கு 80 முதல் 100 ரூபாய் வரையிலும் செண்டு பூ 20 ரூபாய்க சம்பங்கி பூ 10 ரூபாய்க்கும் கோழிக்கொண்டை பூ 15 ரூபாய்க்கும் ஜாதிப்பூ 40 ரூபாய்க்குமே விலை போகிறது. இதுதவிர போக்குவரத்தும் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் பூக்களுக்கு மிகக்குறைந்த விலையே கிடைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் பூக்களை பறிப்பதற்கான கூலி கூட கிடைப்பதில்லை. பூக்கள் பயிரிடுவ தையே கைவிட்டு விடலாம் போலிருக்கிறது என்று விவசாயிகள் வேதனையுடன் சொல்கிறார்கள் .

More News >>