அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு...!
அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரேசில், கொலம்பியா, ஸ்பெயின் உள்பட வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி மூன்றரை கோடிக்குமேல் நபர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இந்தியாவில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்தைத் தாண்டிவிட்டது. மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துவிட்டது.
அமெரிக்காவில் நோயின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இங்கு இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 75 லட்சத்திற்கு மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கும் கூட நோய் பரவியது இன்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பணிபுரியும் அமேசான் நிறுவன ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது தெரியவந்துள்ளது. இந்த தகவல் ஏற்கனவே வெளியான போதிலும் இதுவரை அமேசான் நிறுவனம் இது குறித்து எந்த விவரங்களையும் வெளியிடாமல் இருந்தது.
தற்போது தங்களது நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதை அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்ச் மாத தொடக்கம் முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 19,800க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் அமெரிக்காவில் மட்டும் 13.7 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் அமெரிக்காவில் சாதாரண மக்களை ஒப்பிடும்போது தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நோய் பரவல் குறைவாகும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.