9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்த நடிகை..!
9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்த மலையாள டிவி நடிகை சரண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வருகிறார்.கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையாள டிவி தொடர்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர் சரண்யா சசி. ஒரே நேரத்தில் பல டிவிக்களில் இவரது தொடர்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டது.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பரிசோதித்து போது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவருக்கு மூளையில் முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு சில மாத ஓய்வுக்குப் பின்னர் சரண்யா மீண்டும் சீரியல்களில் வழக்கம்போல நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் ஒரு வருடம் கழித்து மீண்டும் அவருக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதித்தபோது மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். இதனால் இரண்டாவதாக சரண்யாவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பிறகு அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. அவர் படுத்த படுக்கையானார். இதையடுத்து மேலும் 6 முறை அடுத்தடுத்து மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 8 முறை தொடர்ந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து 9வது முறையாகக் கடந்த ஏப்ரல் மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்குச் சற்று பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின்னர் தான் அவரது உடல்நிலை மெதுவாக முன்னேறத் தொடங்கியது. கோதமங்கலம் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகப் படுத்த படுக்கையாகக் கிடந்த தனது மகள் தற்போது சிறிது நடமாடத் தொடங்கியுள்ளதாக அவரது தாய் கீதா கூறுகிறார். 9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்றுதான் நான் கருதினேன். ஆனால் இப்போது எனக்கு லேசான நம்பிக்கை வந்துள்ளது என்கிறார் தாய் கீதா.