அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அட்மிட்.. கொரோனா பாதிப்புக்குச் சிகிச்சை..

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அங்கு இந்நோய்க்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நோய்க்கு மாத்திரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஹைட்ராக்சி குளோரோகுயின் நோய்த் தடுப்புக்கு ஓரளவு பயன்படுவதாகக் கூறப்பட்டது. அதை முன்னெச்சரிக்கையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில், டிரம்ப்பின் ஆலோசகர் ஹோப்ஸ் ஹிக்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டிரம்ப்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் இருவருக்குமே கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது. இதன்பின், வெள்ளை மாளிகை டாக்டர்களின் ஆலோசனையை ஏற்று டிரம்ப், மருத்துவமனைக்குச் சென்றார். அவர் வால்டர் ரீட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு அவர் கூறுகையில், எனக்கு அதிக ஆதரவு குரல் கொடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் வால்டர் ரீட் மருத்துவமனைக்குச் செல்கிறேன். நான் நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன். அனைத்தும் நன்றாக நடக்கும். மெலனியாவும் நன்றாக உள்ளார் என்று தெரிவித்தார்.

More News >>