உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலையை பிரதமர் திறந்து வைக்கிறார்..

மணாலி - லே நகருக்கு இடையே கட்டப்பட்டுள்ள உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இமாசலப் பிரதேசத்தில் 10 ஆயிரம் அடி உயரத்தில், உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் பெயரில் அடல் சுரங்கப்பாதை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாதையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இமாசலப் பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே நகருக்கு மலையைக் குடைந்து 9.02 கி.மீ. நீளத்திற்குச் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலை ஆகும்.

இந்த இருவழிச் சாலையின் மூலம் மணாலியில் இருந்து லே செல்லும் தூரத்தில் 46 கி.மீ. குறைகிறது. பயண நேரத்தில் நான்கைந்து மணி நேரம் குறையும். இந்த சாலையில் தினமும் 3 ஆயிரம் கார்களும், 1500 லாரிகளும் செல்லலாம். பல பாதுகாப்பு அம்சங்களும் இந்த சுரங்கச் சாலையில் உள்ளன. ஒவ்வொரு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி வசதி, 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள், 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள், 500 மீட்டர் தூரத்தில் அவசர வெளியேறும் வழிகள் என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த சுரங்கம் அமைப்பதற்கு கட்த 2000ம் ஆண்டில் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அரசு முடிவு செய்தது. 2002ல் மே 26ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சுரங்கப் பாதைக்கு அடல் சுரங்கப் பாதை என்று பெயரிடுவதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.இந்நிலையில், இன்று காலை இந்த சுரங்கப்பாதையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் சண்டிகருக்கு வந்தார். அங்கிருந்து சுரங்கப்பாதை ஆரம்ப இடத்திற்கு காரில் வந்தார்.

More News >>