எடையை குறைக்க உதவும் கொண்டைக்கடலை சாலட்..!
கொண்டைக்கடலை அதிகமான புரதச் சத்து கொண்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வேளாண்துறையின் தரவுப்படி 100 கிராம் கொண்டைக்கடலையில் 19 கிராம் புரதம் (புரோட்டீன்), 17 கிராம் நார்ச்சத்து மற்றும் 6 கிராம் கொழுப்பு உள்ளது. இதில் கொலஸ்ட்ரால் வகை கொழுப்பு கிடையாது. ஆகவே, உடல் எடை குறைப்பதற்கு ஏற்ற உணவாகக் கொண்டைக்கடலை கூறப்படுகிறது.
புரதம், நம் உடலுக்கு மிகவும் அவசியம். உடலுக்கு அத்தியாவசியமான மூன்று பெரு ஊட்டச்சத்துகளில் ஒன்று புரோட்டீன் எனப்படும் புரதமாகும். இது தசைக்கும் எலும்புக்கும் ஆரோக்கியமளிக்கிறது. உடலுக்குப் பெலனையும் நீண்டு உழைக்கும் ஆற்றலையும் தருகிறது.
உடல் வலிமை பெறுவதற்கு மாத்திரமல்ல, அதிகப்படியான எடையைக் குறைக்க விரும்புவோருக்கும் உடல் நல ஆலோசகர்கள் கொண்டைக்கடலையையே பரிந்துரைக்கிறார்கள். கொண்டைக்கடலையை நாம் எப்போதும் பயன்படுத்தி வருகிறோம். கொண்டைக்கடலையைப் பயன்படுத்தி சாலட் தயாரித்துச் சாப்பிடலாம்.
கொண்டைக்கடலை சாலட்
தேவையானவை: இரவில் ஊறவைக்கப்பட்ட கொண்டைக்கடலை - 1 கிண்ணம், ஆப்பிள் - அரை பழம் (நன்றாக நறுக்கிக்கொள்ளவும்), காரட் - 1 (சீவியது), தக்காளி - 1 அல்லது 2 (நறுக்கிக்கொள்ளவும்), வறுத்த சீரக தூள் - 1 தேக்கரண்டி, வதக்கிய சிவப்பு வற்றல் - 1 (காய்ந்த மிளகாய்), கறுப்பு உப்பு - தேவையான அளவு, எலுமிச்சை சாறு - தேவையான அளவு, தேன் - 1 முதல் 2 தேக்கரண்டி தேன், கொத்தமல்லி இலை - அரை தேக்கரண்டி, புதினா இலை - அரை தேக்கரண்டி
செய்முறை:
ஊற வைத்த கொண்டைக்கடலை, நறுக்கிய ஆப்பிள் மற்றும் தக்காளி, சீவிய காரட் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். சீரக தூள், காய்ந்த மிளகாய், கறுப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன், கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலைகளைச் சிறு கல் உரலில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.ஏற்கனவே கொண்டைக்கடலையுடன் எடுத்து வைக்கப்பட்ட ஆப்பிள், தக்காளி, காரட் இவற்றின்மேல் அரைக்கப்பட்டவற்றைப் போட்டு, நன்றாகக் கிளறவும். சுவை அதிகம் தேவையென்றால் வறுத்த முந்திரி அல்லது பன்னீரைச் சேர்க்கலாம்.இந்த சாலட்டை தனியாகவோ அல்லது மதிய உணவுடன் கூட்டாகவே சாப்பிடலாம்.இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவைக் கட்டுக்குள் வைப்பதற்கும் கொண்டைக்கடலை ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது.