அக்.5. முதல் புறநகர் ரயில்களில் தமிழக அரசு ஊழியர்கள் பயணிக்கலாம்: தென்னக ரயில்வே புதிய ஏற்பாடு..!
தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க மாநில அரசு ஊழியர்கள் சென்னை நகரச் சிறப்புப் புறநகர் ரயில்களில் அக்டோபர் 5ம் தேதி முதல் பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தென்னக ரயில்வே ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ,தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்படும் அதிகாரி ஒருவர் மாநில அரசின் அத்தியாவசிய பணி ஊழியர் யார் என்பதைத் தேர்வு செய்து அறிவிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் அந்த ஊழியர்களுக்குப் பயண அனுமதி சான்றிதழை வழங்குவார். அதில் அரசு ஊழியர் பெயர், பதவி, இலாகா, அலுவலகம் ஆகிய விபரங்கள் குறிப்பிடப்பட வேண்டும் .இந்த அனுமதி கடிதத்தின் ஒரிஜினல் மட்டுமே ஏற்கப்படும். அத்துடன் அவர் பணியாற்றும் அலுவலகத்தினால் வழங்கப் பட்ட ஒரிஜினல் போட்டோ ஐடி கார்டும் அவசியம். இந்த ஊழியர்களுக்கு இரண்டு நிலைகளில் சோதனைகள் நடத்தப்படும் .
கொரோனா வைரஸ் தொற்றுக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைப் பயணிகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும், . தமிழக அரசினால் நியமிக்கப்பட்ட அதிகாரியினால் அங்கீகாரம் செய்து அனுமதி வழங்கப்பட்ட தமிழக அரசு அத்தியாவசிய ஊழியர்களுக்கு மட்டுமே பயணச் சீட்டுகள் வழங்கப்படும்.
சிறப்புப் புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஏற்கனவே சீசன் டிக்கெட்டுகள் வைத்திருந்தால். புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த சீசன் டிக்கெட்டுகள் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்படும்.
தமிழக அரசினால் நியமிக்கப்படும் அதிகாரியின் அங்கீகாரமும். ஒரிஜினல் அனுமதிச் சீட்டும். போட்டோ ஐடி கார்டும் வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பயணச் சீட்டு வழங்கப்படும். பொதுமக்களுக்குப் பயணச்சீட்டு வழங்கப்படமாட்டாது.
ரயில் நிலையத்தில் நுழையும் இடத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸ் அல்லது தமிழ்நாடு மாநில போலீஸ் ஆகியோர் நிறுத்தப்பட்டு இருப்பார்கள். அவர்களிடம் ஒரிஜினல் பயண அனுமதி கடிதத்தையும் ஃபோட்டோ ஐடி கார்டையும் காட்டினால் மட்டுமே பயணிகள் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.