அடல் சுரங்கச் சாலையை 6 ஆண்டில் கட்டி முடித்தோம்.. பிரதமர் மோடி பெருமிதம்..

மணாலி - லே நகருக்கு இடையே கட்டப்பட்டுள்ள உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 2040ல் முடிய வேண்டிய இந்தத் திட்டத்தை ஆறு ஆண்டுகளில் முடித்து விட்டதாக அவர் தெரிவித்தார். இமாசலப் பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே நகருக்கு மலையைக் குடைந்து 9.02 கி.மீ. நீளத்திற்குச் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலை ஆகும். இந்த சுரங்கம் அமைப்பதற்குக் கடந்த 2002ம் ஆண்டில் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சுரங்கப் பாதைக்கு அடல் சுரங்கப் பாதை என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த சுரங்கச் சாலையைப் பிரதமர் மோடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த சுரங்கச் சாலைக்கு வாஜ்பாய் 2002ல் அடிக்கல் நாட்டினார். 2014ம் ஆண்டு வரை இந்த திட்டம் மெதுவாகச் செயல்படுத்தப்பட்டு வந்தது. 1300 நீளத்திற்கு மட்டுமே பணிகள் முடிந்திருந்தன. அதே வேகத்தில் திட்டம் செயல்பட்டிருந்தால் இது 2040ம் ஆண்டில்தான் முடிந்திருக்கும். ஆனால், நாங்கள் 6 ஆண்டுகளில் கட்டி முடித்திருக்கிறோம். நாம் நீண்ட காலமாக எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது இது அதில் ஒரு மைல்கல்லாக அமைகிறது.

இது போன்ற பெரிய திட்டங்கள் நிதிப் பற்றாக்குறையால் தேங்கி நிற்கும். ஆனால், நாம் இத்திட்டத்தை வேகமாகச் செயல்படுத்தியுள்ளோம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களை இங்கு அழைத்து வந்து இத்திட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளக் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.பின்னர், பிரதமர் மோடி இந்த சுரங்கச் சாலை வழியாக காரில் மறுமுனைக்குச் சென்று திரும்பினார். முன்னதாக, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் சண்டிகருக்கு வந்து அங்கிருந்து காரில் மணாலிக்கு வந்து சேர்ந்தார்.கொரோனா பரவியதற்குப் பின்னர், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்குப் பிரதமர் மோடி சென்றார். அதற்குப் பிறகு, இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்கவே நேரில் வந்துள்ளார். மற்ற திட்டங்கள் அனைத்தையும் காணொலி வாயிலாகவே திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>