நோ டைம் டு டை புதிய ஜேம்ஸ்பாண்ட் படம் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது...!
பாண்ட் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி ஜேம்ஸ்பாண்ட் சீரிஸில் 25வது படமாக வெளிவர உள்ள 'நோ டைம் டு டை' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது. அனேகமாக அடுத்த வருடம் தான் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சுட்டுப் போட்டால் கூட ஆங்கிலம் தெரியாதவர்களும் இந்த படங்களை விரும்பிப் பார்ப்பார்கள்.இவற்றில் வரும் அதிரடி ஆக்சன் காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
1962ல் தான் 'டாக்டர் நோ' என்ற பெயரில் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானது. இதில் சீன் கானரி தான் முதல் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்திருந்தார். இவர் மட்டுமே ஏழு படங்களில் ஜேம்ஸ்பாண்ட் ஆக வந்துள்ளார். சீன் கானரி தவிரப் பேரி நெல்சன், டேவிட் நிவென், ஜார்ஜ் லேசன்பி, டிமோதி டால்டன், ரோஜர் மூர், பியர்ஸ் பிராஸ்னன் எனக் கடைசியாக டேனியல் கிரைக் உட்பட 9 பேர் ஜேம்ஸ்பாண்ட் ஆக வந்து நம்மைச் சீட்டின் நுனிக்குக் கொண்டு வந்துள்ளனர்.
தற்போது ஜேம்ஸ் பாண்ட் சீரிஸில் 25வது படமாக 'நோ டைம் டு டை' வெளியாக உள்ளது. இந்த படத்திலும் டோனி கிரெய்க் தான் ஜேம்ஸ்பாண்டாக வருகிறார். இது தன்னுடைய கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம் என ஏற்கனவே இவர் அறிவித்து விட்டார். இந்தப் படத்திற்குத் தொடக்கம் முதலே சிக்கல் இருந்து வந்தது. முதலில் இந்தப் படத்தை டேனி போயல் என்பவர் தான் இயக்கினார். பின்னர் திடீரென இவர் இந்த படத்தில் இருந்து விலகினார். இதனால் நோ டைம் டு டை'யின் படப்பிடிப்பு பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் கேரி ஜோஜி புக்வாங்கா என்பவர் படத்தை டைரக்ட் செய்யும் பொறுப்பை ஏற்றார். இதன் பிறகு சண்டைக் காட்சிகளின்போது ஏற்பட்ட விபத்தில் டேனியல் கிரெய்க் காயமடைந்தார்.
இதனால் மேலும் சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை அடைந்தது. வரும் நவம்பர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இந்த சமயத்தில் தான் கொரோனா வடிவில் இந்த படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்தது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த வருடம் ஏப்ரலில் தான் படத்தை வெளியிட முடியும் கூறப்படுகிறது. கடத்தப்பட்ட ஒரு விஞ்ஞானியைக் காப்பாற்ற வேண்டும் என்ற தனது நண்பரின் கோரிக்கையை ஏற்று ஜமைக்காவுக்குச் சென்று விஞ்ஞானியை மீட்பது தான் இந்த படத்தின் கதையாகும். ஜமைக்கா தவிர நார்வே, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது.