தமிழகத்தில் மொபைல் போன் பயன்பாடு குறைகிறது: டிராய் அறிக்கை

தமிழகத்தில் மொபைல் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளதாக டிராய் எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தியத் தொலைத்தொடர்பு சேவைகள் குறித்த செயல்திறனைக் காட்டும் வகையில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடும். தற்போது இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 11 மாதங்களில் தமிழகத்தில் 22 லட்சம் மொபைல் போன் இணைப்புகள் குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சுமார் 8.3 கோடி பிரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெயிட் சந்தாதார்கள் இருந்தனர். சில மாதங்களாகவே இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்படத் துவங்கியது. 2019ம் ஆண்டு செப்டம்பர் மாத எண்ணிக்கையில் இருந்து டிசம்பர் மாதத்தில் 9.4 லட்சம் இணைப்புகள் குறைந்துவிட்டது.

2020ம் ஆண்டின் முதல் காலாண்டில், ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 1.8 லட்சம் புதிய இணைப்புகள் சேர்க்கப்பட்டது. இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 6.7 லட்சமாகச் சரிந்தது.இந்த வீழ்ச்சி செல்போன்களின் டெலி அடர்த்தியை 7 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஒரு இடத்தில் 100 பேருக்கு எத்தனை தொலைப்பேசி அல்லது மொபைல் போன் சந்தாதாரர்கள் உள்ளனர் என்பதைக் கணக்கிடும் முறை டெலி அடர்த்தி என அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் இந்த கணக்கீட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 112.9 சதவீதமாக ஆக இருந்த டெலி அடர்த்தி தற்போது 105.7 சதவீதமாகக் குறைந்துள்ளது என டிராய் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வருடத்தில் சந்தை நிலைமை மாறிவிட்டது. சந்தாதாரர்கள் சிறந்த நெட்வொர்க் கவரேஜை வழங்கும் ஒரே ஒரு எண்ணை மட்டுமே தக்க வைத்துக் கொள்கிறார்கள். பிற எண்களைப் புறக்கணிக்கிறார்கள்.. இது தவிர ஒரு சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆயுட்கால செல்லுபடி திட்டத்தை (life time validity) ரத்து செய்ததும் மொபைல் போன் இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு ஒரு காரணம் என்று தெரியவந்துள்ளது.

தொலைத்தொடர்பு ஊழியர் தேசியக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சி.கே.மதிவாணன் இது குறித்துக் கூறுகையில் : டெலி அடர்த்தி குறைந்து வரும் நிலையிலும் பி.எஸ்.என்.எல் மட்டுமே அனைத்து முரண்பாடுகளையும் மீறி மொபைல் போன் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு நிறுவனம் துவங்கி7 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மட்டும் தற்போது 1.25 கோடி சந்தாதார்கள் உள்ளனர். சென்னை மாநகரில் மட்டுமே 22 லட்சம் சந்தாதார்கள் உள்ளனர் என்றார்.

More News >>