காய்ச்சலும், மூச்சுத் திணறலும் மட்டுமல்ல சுவை, மணம் இவை தெரியாவிட்டாலும் கூட கொரோனா தான்..!
கொரோனா தொற்றின் முக்கிய அறிகுறிகளான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இல்லாமல் இருந்தும், சுவை மற்றும் மணத்தை உணரும் தன்மை இல்லாவிட்டாலும் கூட கொரோனா உறுதி தான் என இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இன்றைய நிலவரப்படி இதுவரை உலக அளவில் 3 கோடியே 48 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 64 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
பொதுவாக கொரோனா வைரஸ் பரவினால் காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை தான் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகிறது. ஆனால் இவை ஒன்றுமே இல்லாவிட்டால் கூட மணம் மற்றும் சுவையை உணரும் தன்மை போனால் அதுவும் இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் தான் என்று இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. லண்டனில் உள்ள பி.எல். ஓ.எஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்த விவரங்கள் வருமாறு: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 78 சதவீதம் பேருக்கும் திடீரென ருசியையும், மணத்தையும் உணரமுடியாத நிலை ஏற்பட்டது. இவர்களில் 40 சதவீதம் பேருக்கும் இருமல், காய்ச்சல் உள்பட கொரோனா நோய்க்கான அறிகுறிகள் எதுவுமே இல்லை.
மணம் மற்றும் ருசியை உணரும் தன்மை திடீரென போவது கொரோனாவின் தொடக்க அறிகுறிகள் ஆகும். எனவே இந்நோயைக் கட்டுப்படுத்த அரசுகள் கடுமையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் பரிசோதனை நடத்தும் போது இந்த அறிகுறிகள் குறித்தும் பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 முதல் மே 14 வரை நோய் பரவல் அதிகமாக இருந்த சமயத்தில் தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் 590 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.