ஆண் குழந்தை இருப்பது பெருமை எல்லாம் ஒன்றும் கிடையாது...! பிரபல நடிகை கூறுகிறார்..!
குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை இருப்பதைப் பெருமையாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் விராட் கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா.கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகும் மகிழ்ச்சியில் உள்ளனர். தான் விரைவில் தாயாகப் போவதாக சமூக இணையதளங்கள் மூலம் தான் சமீபத்தில் அனுஷ்கா கூறினார். இவர் அடிக்கடி நமது சமூகத்தில் நடைபெறும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது உண்டு. சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறுகையில், மீண்டும் ஒரு பலாத்கார சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. இதுபோன்ற கொடும் செயலில் ஈடுபடும் ஆண்களின் மனதில் கொஞ்சமாவது பயம் இருக்குமா என்பது சந்தேகமே. இதுபோன்ற மன்னிக்க முடியாத குற்றங்களில் ஈடுபடுபவர்களின் மனதில் நமது சமூகம் மூலம் தான் பயத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதுபோன்ற கிரிமினல்களிடமிருந்து நம்முடைய பெண் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் எனத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது கர்ப்பிணியாக உள்ள இவர், ஆண் குழந்தைகள் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். ஆண் குழந்தைகள் பிறப்பதையும், தங்களது குடும்பத்தில் ஆண் குழந்தை இருப்பதையும் ஒரு பெருமையாகப் பலரும் கருதுகின்றனர். இதில் என்ன பெருமை இருக்கிறது என எனக்குப் புரியவில்லை. ஒரு பெண் குழந்தையை மதிக்கத் தெரியும் அளவுக்கு ஒரு ஆணை வளர்ப்பதில் தான் அவனது பெற்றோருக்குப் பெருமை உள்ளது. அதைத்தான் பெருமையாகக் கருத வேண்டும்.
ஒரு பெண் குழந்தையைப் பிரசவிப்பதை விடப் பெரிய பெருமை வேறு எதுவும் கிடையாது என்பதுதான் எனது கருத்தாகும். சமூகத்தில் ஆண்-பெண் என்ற பாகுபாடு பார்ப்பது தவறான நடவடிக்கையாகும். பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. எனவே பெண்களை மதிக்க தங்களது ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் சமூகத்திற்கு அவர்கள் செய்யும் முக்கிய கடமையாகும் என்று கூறுகிறார் அனுஷ்கா.