பாடகர் விஜய் யேசுதாஸ் புதிதாக தொடங்கப் போகும் தொழில் என்ன தெரியுமா?
பிரபல பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் கொச்சியில் புதிதாகப் பிரம்மாண்டமான சலூன் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.பழம்பெரும் பாடகரான கே ஜே யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ் 2000ல் 'மிலேனியம் ஸ்டார்ஸ்' என்ற படத்தில் பாடகராக அறிமுகமானார். பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் தான் இவரை அறிமுகம் செய்தார். இதன் பின்னர் கடந்த 20 வருடங்களாகத் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்படப் பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
தனுஷின் மாரி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். கேரள அரசின் சிறந்த பாடகருக்கான விருதை 3 முறை பெற்றுள்ளார். இதுதவிர பிலிம்பேர், நந்தி, ஆசியா விஷன் உள்பட பல்வேறு விருதுகள் இவருக்குக் கிடைத்துள்ளன.இத்தனை வருடங்கள் சினிமா துறையைச் சார்ந்தே இருந்த விஜய் யேசுதாஸ் தற்போது தனது கவனத்தை வேறு பக்கம் திருப்ப முடிவு செய்துள்ளார். 3 நண்பர்களுடன் சேர்ந்து கொச்சியில் ஒரு பிரம்மாண்ட சலூன் ஒன்றைத் தொடங்க தீர்மானித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுவதைக் கேட்போம். ரொம்ப நாட்களாக ஒரே துறையில் இருப்பதால் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த பலனும் கிடைக்காது. இருபது வருடங்களாக சினிமாவில் பாடி வருவது உண்மைதான். ஆனால் பாடகனாக இருந்து நான் பெரிதாக எதையும் சம்பாதிக்கவில்லை. அதை ஒரு தவறாக நான் கூறவில்லை. உண்மை அதுதான்.எனவே அதை மட்டும் நம்பி இருப்பதால் பலனில்லை என்பதை இப்போது நான் உணர்ந்து கொண்டேன். இதனால் எனது கவனத்தை வேறு பக்கம் திருப்பலாம் என்று சமீப காலமாகவே நான் எண்ணிக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் தான் எனது நண்பர் ஒருவர் சலூன் தொடங்கலாம் என ஒரு ஐடியா கொடுத்தார். உடனடியாக நான் களத்தில் இறங்கி அது குறித்து விசாரிக்கத் தொடங்கினேன்.
அமெரிக்கா செல்லும் போதெல்லாம் நான் தாடியை ட்ரிம் செய்வதற்காக அதற்காகவே உள்ள சலூனுக்குத் தான் செல்வேன்.அதுபோன்ற ஒரு சலூனை கேரளாவில் தொடங்கலாம் என நான் முடிவு செய்தேன். அமெரிக்காவில் 'சோப் ஷாப்' என்ற பிரம்மாண்டமான சலூன் உள்ளது. அமெரிக்க பிராண்டான இதன் உரிமையாளர் கனடாவைச் சேர்ந்தவர் ஆவார். அந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் கோவாவில் மட்டும் தான் கிளை உள்ளது. அந்த பிராண்ட் சலூனை கொச்சியில் திறக்க தீர்மானித்துள்ளேன். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் இங்கு வருபவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்று கூறுகிறார் விஜய் யேசுதாஸ்.