சிக்கலில் சிக்கித்தவிக்கும் வங்கிகள்.. பட்டியலில் அடுத்து பஞ்சாப் நேஷனல் பேங்க். சின்டெக்ஸ் கம்பெனியால் வந்தது சிக்கல்..

அது என்னவோ தெரியவில்லை.. தற்போது வங்கிகளுக்கு போறாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.தமிழகத்தில் உருவாகிப் புகழ்பெற்ற லட்சுமி விலாஸ் பேங்க் பெரும் சிக்கலைச் சந்தித்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. கேரளாவில் உருவாக்கிப் புகழ்பெற்ற தனலட்சுமி பேங்க் அடுத்த சிக்கலில் அடியெடுத்து வைத்திருக்கும் வங்கியாக இருக்கிறது.இந்த பட்டியலில் அடுத்து வரவேற்பது பஞ்சாப் நேஷனல் வங்கி. கடன் கொடுத்துக் கொடுத்தே இந்த வங்கி காலாவதியாகி விடும் போலிருக்கிறது.

ஏற்கனவே நீரவ் மோடி என்பவருக்கு 11 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் கொடுத்துவிட்டு இங்கே இருக்கிறது பஞ்சாப் நேஷனல் பேங்க். கடனை செலுத்த முடியாது என்று டேக்கா கொடுத்து விட்ட நீரவ் மோடி லண்டனில் செட்டில் ஆகி இருக்கிறார். இந்த மோசடி தொடர்பாக லண்டன் மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

நீரவ் மோடி ஏற்படுத்திய நஷ்டத்தில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்த சிக்கல் சின்டெக்ஸ் கம்பெனி மூலம் ஏற்பட்டிருக்கிறது .இந்த கம்பெனிக்கு அளித்த கடனை, மோசடி எனப் பஞ்சாப் நேஷனல் பேங்க். அறிவித்து இருக்கிறது .சிண்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்கிற இந்த கம்பெனிக்கு பாங்க் கொடுத்து இருக்கும் கடன் 1,203 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய தொகையைத் தான் மோசடி கடன் என்று அறிவித்திருக்கிறது பஞ்சாப் நேஷனல் பாங்க் .இப்படி மோசடி என அறிவித்தது குறித்து மத்திய ரிசர்வ் வங்கிக்கும் நேஷனல் பேங்க் தகவல் கொடுத்து இருக்கிறது.

ஒரு கடன் கணக்கை , மோசடி என அறிவித்துவிட்டால், மீதம் இருக்கும் மொத்த கடன் தொகையையும் தனி ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது மோசமான மற்றும் வராக்கடன் என்ற பிரிவுக்கு மாற்றிவிட வேண்டும். இதை ஒரே முறையில் அல்லது நான்கு காலாண்டு காலத்துக்குள்ளாக மாற்றம் செய்துவிட வேண்டும்.இதன்படி இந்த வாங்கி சிண்டெக்ஸ் கம்பெனிக்கு கொடுத்து இருக்கும் கடனில் 215.21 கோடி ரூபாயை ஏற்கனவே வராக்கடன் பிரிவிற்கு மாற்றியிருக்கிறது .

பஞ்சாப் நேஷனல் பேங்க் கொடுத்திருக்கும் கடனில் இன்னும் எத்தனை கோடி ரூபாய் இப்படிச் சிக்கலில் இருக்கிறதோ தெரியவில்லை.சிண்டெக்ஸ் கம்பெனி பஞ்சாப் நேஷனல் பேங்க் மட்டுமல்லாமல் , பேங்க் ஆஃப் பரோடா, கனரா பேங்க், பஞ்சாப் & சிந்த் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலும் கடன் வாங்கி இருக்கிறதாம்.

கடந்த மார்ச்சு மாத நிலவரப்படி சிண்டெக்ஸ் கம்பெனியின் மொத்த கடன் தொகை 7 ஆயிரத்து 158 கோடியாக உள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.இப்போது பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவித்தது போல, சிண்டெக்ஸ் கம்பெனிக்கு கடன் கொடுத்த மற்ற வங்கிகளும் வரிசையாகக் கடன் தொகைகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கொரோனாவால் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார பிரச்சனைகளால், இன்னும் எத்தனை கம்பெனிகள், இப்படி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிக்கலில் தவிக்கிறது என்பது தெரியவில்லை. அதுமட்டுமல்ல இப்படி சின்டெக்ஸ் கம்பெனி போல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் கம்பெனிகளால் இன்னும் எத்தனை வங்கிகளில் சிக்கல் உருவாகப் போகிறதோ என்பதும் தெரியவில்லை.

More News >>