உபி இளம்பெண் பலாத்கார கொலைக்கு யார் காரணம்? அமலாபால் கருத்தால் சர்ச்சை...!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகியோ, ஜாதியோ, போலீசோ காரணம் அல்ல, என்ன நடந்தாலும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் சமூகம் தான் காரணம் என்று கூறிய நடிகை அமலாபாலின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராசில் ஒரு இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம் பெண்ணின் உடலை அவரது உறவினர்களுக்கே தெரியாமல் போலீசார் இரவோடு இரவாக எரித்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இளம் பெண்ணின் உறவினர்கள் யாரையும் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக போலீசார் அவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உபி போலீசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரசார் ஹத்ராசுக்கு செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தித் தாக்கவும் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஹத்ராசுக்கு புறப்பட்டனர். இன்றும் உபி மாநில எல்லையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உட்பட 5 பேரை மட்டும் இளம்பெண்ணின் வீட்டுக்குச் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
ஹத்ராசில் இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை அமலாபாலும் தன் பங்குக்கு ஒரு கருத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது: பலாத்காரம் செய்து கொன்று விட்டனர். அந்த இளம்பெண்ணைச் சாம்பலாக்கி விட்டனர். யார் இதைச் செய்தார்கள்? இந்த கொடூர சம்பவத்திற்கு ஜாதியோ, உத்தரப்பிரதேச மாநில போலீசோ, யோகி ஆதித்யநாத்தோ காரணமல்ல. நமது சமூகத்தில் நம்முடன் இருக்கும், எது நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் தான் இதற்குக் காரணமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்மாநில போலீசை நாடே குற்றம் சாட்டி வரும் நிலையில் அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்று அமலாபால் கூறியிருப்பதற்கு சமூக இணையதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமலா பாலின் கருத்துக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.