சபரிமலையில் இம்மாதம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய முடியுமா?
சபரிமலையில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல கால பூஜைகளுக்கு பக்தர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இம்மாதம் ஐப்பசி மாத பூஜைகளுக்கு சோதனை அடிப்படையில் பக்தர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா லாக்டவுனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாதந்தோறும் வழக்கமான மாத பூஜைகள் நடைபெற்று வருகின்ற போதிலும் பக்தர்களை தற்போதைய சூழ்நிலையில் அனுமதிக்க வேண்டாம் என்று கேரளா அரசு தீர்மானித்திருந்தது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி முதல் சபரிமலையில் தொடங்க உள்ளது. எனவே மண்டல கால பூஜைகளில் பக்தர்களுக்கு தரிசனம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல காலம் முதல் பக்தர்களை அனுமதிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக சோதனை அடிப்படையில் அக்டோபர் மாதத்தில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கும் போது குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் கேரள அரசு தான் இது தொடர்பான இறுதி முடிவை எடுக்க வேண்டும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மண்டல காலம் முதல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்றும், வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலை வரும் பக்தர்களுக்கு சபரிமலையில் 2 இடங்களில் வைத்து ஆன்டிஜன் பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு நாளைக்கு எத்தனை பேரை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம், சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய நிபந்தனைகள் உள்பட குறித்து ஆலோசிப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை அக்டோபர் 16ம் தேதி திறக்கப்படுகிறது. அப்போது சோதனை அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நாளை திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும்.